பள்ளிகளில் இடம் கிடைக்காமல் மாணவர்களின் பெற்றோர் தவிப்பு


தேவகோட்டை : தேவகோட்டை நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆர்வம் காட்டுவதால், இடம் கிடைக்காமல் பெற்றோர் தவிக்கின்றனர். தேவகோட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் இருக்கின்றன. கிராமபுற மாணவர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகள் படிப்பிற்கு கூடுதல் செலவானாலும் தேவகோட்டை நகரில் உள்ள பள்ளிகளில் சேர்க்கவே விரும்புகின்றனர். அனைவரும் நகர் பகுதிக்கு வருவதால் பள்ளிகளில் இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

அரசு பள்ளிகள் இருந்தாலும், தனியார் பள்ளிகளில் சேர்க்கவே ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியாத நிலை உள்ளதால் பள்ளி நிர்வாகத்தினருக்கும், பெற்றோர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடப்பது தொடர்கிறது. நிர்வாகத்தினரும் ஆசிரியர்களும் பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். இது பற்றி பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், தற்போதே மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் காரணமாக மைக் மூலம் பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது.

ஆசிரியர்கள் எவ்வளவு தான் சப்தமாக பாடம் நடத்த முடியும். மாணவர்களை சேர்க்கும் அளவிற்கு பள்ளிகளில் வசதிகளை செய்ய வேண்டியது உள்ளது. அரசு பள்ளிகளிலும் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், அங்கும் மாணவர்களை பெற்றோர் சேர்க்க தயங்குகின்றனர் என்றார். அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வியின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு போதுமான ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisements
கல்வி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »