புது மாப்பிள்ளை பலி


தேவகோட்டை செல்லப்பசெட்டியார் கோயில் தெற்கு வீதியில் வசிப்பவர் பஞ்சநாதன். இவரது மகன் சிவக்குமார் (28). இவருக்கு கடந்த மே 8 ந்தேதி திருமணம் நடந்தது. நேற்று மதியம் சிவக்குமார் தனது மோட்டார் சைக்கிளில் கரூர் டாஸ்மாக் பாரில் வேலைபார்க்கும் நண்பர் பிரபுவுடன் புளியால் கிராமத்திற்கு விருந்துக்கு சென்றார். புளியால் பஸ் ஸ்டாப் அருகே செல்லும் போது தேவகோட்டைக்கு வந்த டிராக்டர் மோதியது. சிவக்குமார் ஹெல்மெட் அணியாததால் சம்பவ இடத்திலேயே பலியானார். பிரபு பலத்த காயங்களுடன் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

Advertisements

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க மோதல்


தேவகோட்டை சருகணி ரோட்டில் சாத்திக்கோட்டை காலனி உள்ளது.இதன் அருகே அரசுக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. கடந்தாண்டு காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி முத்தாத்தாள் இந்த இடத்தில் பட்டா கேட்டு அரசுக்கு மனு செய்தார். சில வாரங்களுக்கு முன்பு அதே காலனியைச் சேர்ந்த சுப்பையா அந்த இடத்தில் கொட்டகை போட்டார். ரவிச்சந்திரன் மகன் ராமு மனித உரிமை அமைப்பு என்ற போர்டை நேற்று மதியம் அந்த இடத்தில் வைத்தார். நேற்று இந்த இடம் தொடர்பாக இருவரும் மோதிக் கொண்டனர். படுகாயமடைந்த ரவிச்சந்திரன் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். போர்டை சுப்பையா கோஷ்டி எடுத்து வீசியதாகவும், கொட்டகையை ரவிச்சந்திரன் கோஷ்டி பிரித்து வீசியதாகவும் இருவரும் தனித்தனியாக தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

எஸ்.ஐ.,க்கள் மீனாட்சிசுந்தரம், கருப்பையா ஆகியோர் ரவிச்சந்திரன் மகன்கள் ராமு, லட்சுமணன், மணிகண்டன் சகோதரர்கள் மூவரையும் கைது செய்தனர். மூவரும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சுப்பு, மகள் மேகலா, காளியம்மாள், கல்யாணி, சக்திவேல்,சுப்பையா ஆகியோரை தேடி போலீசார் வருகின்றனர்.