இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கல்


சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் டாக்டர் செபாஸ்டியான் அன்னம்மாள் மக்கள் கல்லூரியில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மேதகு ஆயர் எட்வர்டு பிரான்சிஸ் கல்வி சேவை அறக்கட்டளை மற்றும் மனித உரிமைகள் கழகம், ஒய்ஸ்மென் கழகம் சார்பில் நடைபெற்ற, இவ் விழாவுக்கு காரைக்குடி தொகுதி அ.தி.மு.க. செயலாளர் சொர்ணலிங்கம் தலைமை வகித்தார்.

ஆனந்தா கல்லூரி செயலாளர் சூசைமாணிக்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நாகாடி செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகரச் செயலாளர் ராமச்சந்திரன், ராமநகர் பங்குத்தந்தை முனைவர் சந்தியாகு, வின்சென்ட் தே பவுல் சபை தலைவர் வலம்புரி சவரிமுத்து ஆகியோர் பேசினர்.

300 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ பேசியது:வறுமையால் சில மாணவ மாணவிகள் கல்வியை தொடர முடியாமல் உள்ளனர். இந்நிலையை மாற்ற தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கல்விக்காக தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கி வருகிறது. இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில், காளிமுத்துசேர்வை, நகர்மன்ற உறுப்பினர் செல்லமுத்து, காரை மோகன், சுந்தரலிங்கம், சுப.இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மக்கள் கல்லூரி துணைத் தலைவர் மகபூப்பாட்சா வரவேற்றார். தலைவர் போஸ்கோ நன்றி கூறினார்.

Advertisements

மாணவர்களிடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க வலியுறுத்தல்


தேவகோட்டையில் சில பள்ளிகளில் சமீபகாலமாக பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்டு வரும் ஜாதி ரீதியிலான மோதல்களைத் தடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் பரவலாக கல்லூரி மாணவர்களிடையே ஜாதி ரீதியிலான மோதல்கள் ஏற்படுவதும், பின்னர் அப் பிரச்னை தாற்காலிகமாக தீர்க்கப்படுவதும் தொடர் நிகழ்வாக உள்ளன.

ஆனால் பள்ளி மாணவர்களிடையே இந்த சிந்தனை வளரவிடாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் பள்ளி நிர்வாகங்கள் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. ஆனால், தேவகோட்டையில் சில தனியார் பள்ளிகளில் மாணவர்கள் ஜாதி ரீதியாக ஒன்று சேர்ந்து தாக்குதலில் ஈடுபடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.சமீபத்தில் ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கிள் செயினால், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இப் பிரச்னை சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கிடையேயும் மனக்கசப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் பள்ளி நிர்வாகத்தினரும், காவல் துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »