மணல் லாரி செல்வதில் மோதல்: 5 பேர் கைது


தேவகோட்டை : தேவகோட்டை அருகே எழுவங்கோட்டை மணிமுத்தாறில் அரசு மணல் குவாரி உள்ளது. மணல் அள்ளிச் செல்லும் வெளியூர் லாரி, டிராக்டர்கள் எழுவங்கோட்டை வழியே செல்லக்கூடாது என அதிகாரிகள், கிராமத்தினர் முன்னிலையில் பேசிமுடிவு செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் காலை வெங்களூர் அருகே கூனவயலைச் சேர்ந்த பன்னீர் செல்வம் டிராக்டரில் அந்த வழியாக மணல் ஏற்றிச் சென்றுள்ளார். எழுவங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பன்னீர்செல்வம் தனது நண்பர்களான தச்சக்குடி கார்த்திகேயன் (23), பாவனக்கோட்டை ஸ்டாலின் (26), உஞ்சனை மணி(22), காரைக்குடி தினகரன் (22) ஆகியோருடன் எழுவங்கோட்டைக்கு சென்று தகராறு செய்துள்ளார். அந்த வழியாக வந்த நடுவிக்கோட்டையைச் சேர்ந்த பெரியசாமி( 38) யையும் தாக்கியுள்ளனர். அங்கிருந்தவர்கள் ஐந்து பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தாலுகா எஸ்.ஐ. கருப்பையா 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். காயமடைந்த பெரியசாமி தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisements

தேவகோட்டை ஆற்றில் மணல் குவாரி துவங்கியது


தேவகோட்டை மணிமுத்தாறில் எழுவங்கோட்டை கிராமத்தையொட்டி குவாரி அமைத்து மணல் விற்பனை செய்ய அரசு அனுமதியளித்து உத்தரவிட்டது. கடந்த வாரம் பொதுப்பணித்துறையினர் மணல் அள்ளியபோது கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டது. ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாததை தொடர்ந்து சிவகங்கையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்ததில் அரசு விதிமுறைப்படி மணல் அள்ளுவதென முடிவு செய்யப்பட்டது. 3 அடி ஆழத்திற்கும், அரசு நிர்ணயித்த கட்டணமான ஒரு யூனிட் ரூ. 320 க்கு மணல் ஏற்றுவதென முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து உதவி பொறியாளர் பஞ்சவர்ணம் மேற்பார்வையில் நேற்று காலை முதல் மணல் குவாரி துவங்கியது.

அரசின் கட்டணத்திலேயே லாரி, டிராக்டர்களுக்கு சப்ளை செய்யப்பட்டது. டிராக்டரில் ஒரு யூனிட்டுக்கு ரூ. 320 ம், லாரிகளுக்கு இரண்டு யூனிட் ரூ. 627. 40 பைசாவிற்கு ரசீது போடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. சிலர் டி.டி.,க்களை எடுத்து வைத்துக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்க முயற்சி செய்தனர். அதற்கு எதிர்ப்பு கிளம்பவே போலீசார் தலையிட்டு தடுத்தனர். பொதுபணித்துறையினரிடமே பணம் செலுத்தி ரசீது போடப்பட்டது.உதவி கோட்ட செயற்பொறியாளர் சுந்தரமூர்த்தி முகாமிட்டு கண்காணித்து வருகிறார்.நேற்று மாலை ஏராளமான லாரி,டிராக்டரில் மணல் அள்ளி செல்லப்பட்டது.

செய்திகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

எழுவங்கோட்டை ஆற்றில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு


தேவகோட்டை : தேவகோட்டை அருகே எழுவங்கோட்டை மணிமுத்தாற்றில் மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபை தேர்தலுக்கு பின், புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், மணல் தட்டுப்பாட்டை தவிர்க்க அரசே மணல் குவாரியை நடத்துமாறு உத்தரவிட்டது. அதன்படி, தேவகோட்டை அருகே எழுவங்கோட்டை மணிமுத்தாற்றில் நேற்று “பொக்லைன்’ இயந்திரம் மூலம் மணல் எடுக்கும் முயற்சி நடந்தது. அங்குள்ள அணைக்கட்டு பகுதியில் மணல் அள்ளியதால், குடிநீர் ஆதாரம் பாதிக்கும் எனக்கூறி, எழுவங்கோட்டை, போரிவயல் கிராமத்தை சேர்ந்தவர்கள், மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்தனர்.

அங்கு சென்ற தாலுகா இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், பொதுமக்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார். ஊராட்சி துணை தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், அணைக்கட்டில் மணல் அள்ள தடை இருந்தும், மணல் அள்ள அனுமதி வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆற்றில் இரண்டு ஆழ்குழாய் கிணறு போட்டுள்ளோம். ஆற்றை நம்பி 300 ஏக்கர் நிலங்கள் உள்ளன. நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்கில், மணல் அள்ள அனுமதிக்க மாட்டோம்.” என்றார்.

தேவகோட்டை ஆர்.டி.ஓ., பன்னீர் செல்வம் கூறுகையில்,”” எழுவங்கோட்டை மணல் குவாரியை அரசே ஏற்று நடத்துகிறது. தனியாக யாருக்கும் குத்தகை தரவில்லை. மணல் தட்டுப்பாட்டை போக்க, நேற்று முன்தினம் முதல் இங்கு, அரசு மணல் குவாரி துவக்கியுள்ளது. இதில் தனியார் தலையீடு இல்லை. இது குறித்து அக்கிராம மக்களிடம் எடுத்து கூற உள்ளேன்,” என்றார்.

சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »