சிலம்பணி ஊரணியில் செத்து மிதந்த மீன்கள்


தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் அருகே உள்ள ஊரணியில் பாலித்தீன், உட்பட கழிவுகளின் நீர்தேக்கமாக காணப்படுகிறது.நேற்று காலை பெரிய பெரிய மீன்கள் செத்து மிதந்தன. ஊரணியிலுள்ள தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.

நகராட்சி தலைவி சுமித்ரா கூறியதாவது: திடீரென மீன்கள் இறந்து இருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.விஷம் கலந்துள்ளதா, செப்டிங் டேங்க் கழிவுகளை இரவில் யாரும் கலந்து விட்டார்களா என்று தெரியவில்லை. தண்ணீரை சோதனைக்கு மதுரைக்கு அனுப்பியுள்ளோம், என்றார்.

Advertisements
சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 1 Comment »

தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை


தேவகோட்டை கண்டதேவி சாலையை சேர்ந்தவர் தங்கம் சீனிவாசன். தொழில் அதிபரான இவர் தமிழ்நாடு பார்கவகுல சங்க சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். வீடு அருகே அரிசி ஆலை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கம் சீனிவாசன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று இரவு தங்கம் சீனிவாசனின் மனைவி சரோஜா (60), மூத்த மகன் சண்முகம், மருமகள் ராஜலட்சுமி, பேத்தி சஞ்சனா, இளைய மகன் சசியின் மனைவி நிரோஜா ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டின் பின்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டு சரோஜா எழுந்தார். சிறிது நேரத்தில் முகமூடி கொள்ளையர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கொள்ளையர்கள் சரோஜா கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டினர். அதற்குள் மாடி வீட்டில் தூங்கி கொண்டிருந்த சண்முகம், ராஜலட்சுமி, சஞ்சனா, நிரோஜா ஆகியோர் எழுந்து வந்தனர். அப்போது கொள்ளையர்கள் பணம், நகை எங்கு வைத்து இருக்கிறீர்கள் என்று மிரட்டினர்.

உடனே சரோஜா பணம், நகை எல்லாம் அருகே உள்ள அரிசி ஆலையில் உள்ளது. வீட்டில் நகைகள் இல்லை என்று கூறினார். உடனே கொள்ளையர்கள் குழந்தை சஞ்சனாவை கையில் பிடித்துக்கொண்டு பணம்-நகை எங்கு உள்ளது என்று கூறாவிட்டால் குழந்தையை சுட்டுக் கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.

வீட்டில் இருந்த ஒரு பெண் ணையும் பலாத் காரம் செய்து விடுவோம் என்று கூறினர். இதனால் பயந்துபோன சரோஜா மேல்மாடியில் உள்ள பீரோவில் தான் நகை உள்ளது. எங்களை உயிருடன் விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார்.

இதையடுத்து கொள்ளையர்கள் மாடிக்கு சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 225 பவுன் நகை ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை ஒரு பையில் போட்டு கட்டிக் கொண்டு கீழே வந்தனர். சரோஜா, ராஜலட்சுமி, நிரோஜா ஆகியோர் கழுத்தில் கிடந்த தாலி செயின்களை பார்த்த கொள்ளையர்கள் 3 பேரிடம் தாலி செயின்களை கழற்றி தருமாறு கேட்டனர். அவர்கள் தாலி செயின்களை கொடுக்க மறுத்ததால் மீண்டும் கத்தியை காட்டி மிரட்டி சரோஜா, நாகலட்சுமி, நிரோஜா கழுத்தில் கிடந்த தாலி செயின்களை பறித்துக்கொண்டனர்.

அப்போது ராஜலட்சுமி, எனது தாலி செயினை மட்டும் கொடுத்து விடுங்கள் என்று கொள்ளையர்களின் கால்களில் விழுந்து கெஞ்சினார். இதனால் கொள்ளையர்கள் அவரது தாலி செயினை மட்டும் திருப்பி கொடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர். சுமார் ஒரு மணி நேரம் வீட்டில் தங்கி இருந்து கொள்ளையடித்து சென்று உள்ளனர். மொத்தம் 225 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.55 லட்சம். லேகா என்ற மோப்ப நாய் மோப்பம் பிடித்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

தங்கம் சீனிவாசன் வெளியூர் சென்றபோது கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளதால் கொள்ளையில் ஈடுபட்டது உள்ளூர் கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

குற்றங்கள், சம்பவம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

தென்னீர்வயல் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அடித்து கொலை


தேவகோட்டை அருகே உள்ள தென்னீர் வயல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன்கள் இலங்கேஸ்வரன் (வயது 46), ராமன் என்ற கருணாநிதி (37). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இலங்கேஸ்வரன் வெளி நாட்டில் இருந்து ஊருக்கு வந்து இருந்தார். சொத்து தொடர்பாக அண்ணன்-தம்பி இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் இருவரும் ஒருவர் மீது, ஒருவர் புகார் கொடுத்து இருந்தனர். ராமனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இலங்கேஸ்வரனுக்கு திருமணம் ஆகி விஜய லட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.நேற்றுமுன்தினம் இரவு மின்தடை ஏற்பட்டதால் இவர்கள் வீடுகளில் இருட்டாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு ராமன் முன்விரோதத்தால் அரிவாளை எடுத்து அண்ணன் இலங்கேஸ்வரனை வெட்ட பாய்ந்தார்.

இதை பார்த்த இலங்கேஸ்வரன் நகர்ந்து கொண்டு, அருகே கிடந்த கட்டையை எடுத்து ராமனின் தலையில் ஒங்கி அடித்தார். இதில் ராமன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் தேவகோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்கு பதிவு செய்து இலங்கேஸ்வரனை கைது செய்தார்.

ராமனின் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தேவ கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கோவைமாவட்டத்தை கலக்கிய கபாலி என்ற ரவுடி வெட்டிகொலை செய்யப்பட்டார். அந்த கொலைவழக்கில் ராமன் என்ற கருணாநிதி குற்றவாளியாக சேர்க்கப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

தேவகோட்டை வக்கீல் வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளை


தேவகோட்டையில் வக்கீல் வீட்டை உடைத்து, மர்ம நபர்கள் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கார்ப்பரேஷன் வீதியை சேர்ந்தவர் வக்கீல் சேகர். கடந்த 19ம் தேதி, குடும்பத்தாருடன் புதுக்கோட்டை சென்றார். மறுநாள் இரவு வீட்டிற்கு திரும்பியபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மர்ம நபர்கள், பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டிற்குள் இருந்த சாவியை எடுத்து, பீரோவை திறந்து, அதில் இருந்த பணம் ரூ. 2 லட்சம், 28 பவுன் நகை, வைரத்தோடு என 7 லட்ச ரூபாய் மதிப்புள்ளவற்றை கொள்ளையடித்துள்ளது தெரிந்தது. ஏ.எஸ்.பி., ரமேஷ் சமந்த் ராஜேந்திரா, இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை விசாரிக்கின்றனர். மோப்ப நாய் சாம்ராட், தெருக்களில் ஓடி நின்றது.

தொடர் திருட்டு: இரண்டு ஆண்டுகளுக்கு முன், மர்மநபர்கள் பட்டப்பகலில் ஒரு பெண்ணை கொலை செய்து, 10 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். அதே தெருவில் சில தினங்களுக்கு முன், ஆசிரியர் வீட்டில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை கொள்ளை போனது. நகராட்சி தலைவரின் கணவருக்கு சொந்தமான கடையிலும் திருடு போனது. செபஸ்தியம்மாளிடம் 9 பவுன் செயின் வழிப்பறி செய்யப்பட்டது. நகரில் தொடர்ந்து பல்வேறு வழிப்பறி, திருட்டுக்கள் நடப்பதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் இரவு ரோந்து பணி இல்லாததே முக்கிய காரணம், என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் நகை திருட்டு


தேவகோட்டை : தேவகோட்டை ஞானந்தகிரி நகரைச் சேர்ந்த செபஸ்தியம்மாள்,70. இவர், நேற்று மாலை 5.30 மணிக்கு சரஸ்வதி வாசகசாலைத் தெருவில் உள்ள சகாயமாதா கோயிலுக்கு சென்றார். முனீஸ்வரர் கோயில் அருகே திருப்பத்தில் வந்தபோது, அவ்வழியே வந்த இரண்டு பேர் தாங்களை “போலீஸ்’ என்று கூறி, “”கோயில் பக்கம் பெண்ணின் நகையை சிலர் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்கள்; நகையை போட்டுக்கொண்டு போகாதீர்கள். நாங்கள் போலீஸ்காரர்கள் நகைகளை கொடுத்து விட்டுபோங்கள். திரும்ப வந்து வாங்கிக் கொள்ளுங்கள்,” என கூறியுள்ளனர்.

இதை நம்பிய செபஸ்தியம்மாள் அணிந்திருந்த ரூ. ஒன்றரை லட்சம் மதிப்புள்ள மூன்றரை பவுன் தாலி சங்கிலி, இரண்டரை பவுன் வளையல்களை கழற்றி கொடுத்துள்ளார். “”வெறும் கையோடு போகாதீர்கள்,” என கூறி தங்களிடமிருந்த இரண்டு கவரிங் நகைகளை கொடுத்து விட்டு தப்பினர். ஏமாந்ததை உணர்ந்த செபஸ்தியம்மாள் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். இந்த இடத்தின் அருகே தான் 10 நாட்களுக்கு முன்பு பகலில் பள்ளி ஆசிரியை வீட்டில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

கடத்தப்பட்ட 3 குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீஸ் விசாரணை


கடத்தி வரப்பட்ட மூன்று குழந்தைகளுடன் தப்பிய பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள சருகணிக்கு சில நாட்களுக்கு முன்பு மதுரை வண்டியூரைச் சேர்ந்த தேவி என்பவர், 3 வயதுள்ள குழந்தை, ராஜ்குமார் (13), ரோஜா(12) ஆகியோருடன் வந்துள்ளார். ராஜ்குமார், சரோஜாவை அங்குள்ள விடுதி வசதியுடன் கூடிய பள்ளியில் சேர்த்துள்ளார். விடுதியில் ராஜ்குமார் மற்றொரு மாணவரின் கடிகாரத்தை திருடியுள்ளார். நிர்வாகத்தினர், ராஜ்குமாரிடம் விசாரித்தபோது, ஏற்கனவே குற்றங்கள் செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்ததும், இவரை விட்டு சென்ற பெண் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததும், அந்த பெண்ணிடமிருந்த குழந்தை மதுரை வண்டியூரில் இருந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

நேற்று முன்தினம் அந்த பெண்ணை பள்ளி நிர்வாகத்தினர் வரவழைத்து, ராஜ்குமார், சரோஜாவை பள்ளியை விட்டு நீக்கி சான்றிதழ் வழங்கி அனுப்பினர். அந்த பெண்ணை சருகணி கிராமத்தினர், சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் அந்த பெண் குழந்தைகளுடன் தப்பி விட்டார். விசாரணையில் தப்பிய பெண் புதுக்கோட்டை மாவட்டம் மீசலில் உறவினர் வீட்டில் தங்கி இருப்பது தெரிந்து, போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

தேவகோட்டை அருகே ஆலய சிலை உடைப்பு


தேவகோட்டை : தேவகோட்டை அருகே ஆலய கதவை உடைத்து சிலையை சேதப்படுத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேவகோட்டை அருகே உள்ள வெள்ளிக்கட்டியில் 300 ஆண்டு பழமை வாய்ந்த ஞானபிரகாசியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சிதைந்து போனதால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், ஓடுகளால் ஆன சிறு ஆலயம் கட்டப்பட்டது. பெரிய கோயிலிலிருந்து 4 அடி உயர ஞானபிரகாசியார் சிலை கொண்டு வரப்பட்டு இங்கு வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இக்கிராமத்தில் கிறிஸ்தவர்களே கிடையாது. இக்கோயிலின் முழு நிர்வாகத்தையும் இந்துக்களே நிர்வகித்து வழிபடுகின்றனர். ஜூன் 21ம் தேதி சிறப்பு திருவிழா நடத்துவது வழக்கம். அப்போது மட்டும் சருகணி பங்கு பாதிரியார் சிறப்பு பூஜைகளை நடத்துவார்.

இந்த ஆலயத்தில் கிடா வெட்டி பூஜை நடத்துவதும் வழக்கம். நேற்றுமுன்தினம் மாலை வழிபாடு நடத்தி விட்டு கிராம மக்கள் சென்று விட்டனர். நேற்று இந்த ஆலய கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ஞானபிரகாசியார் சிலையையும் சேதப்படுத்தி இருப்பதை சிலர் பார்த்துள்ளனர். இது குறித்து திருவேகம்பத்தூர் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதிரியார் சார்லஸ் கூறியதாவது: வெள்ளிகட்டி கிராமத்தில் சருகணி கோயிலை கட்டிய ஜேம்ஸ் டிரோசி சாமியார் தான் அந்த கோயிலையும் கட்டி உள்ளார். சுமார் 300 ஆண்டு இருக்கலாம். அவரே உருவாக்கிய சிலை தான் இது. முழுக்க முழுக்க இந்து மதத்தினரே நிர்வகிக்கின்றனர். சமூக விரோதிகள் சிலையை உடைத்திருக்கலாம் என்றார்.

சம்பவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »